பரோடா: 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ஐபிஎல் தொடருக்காக, சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள புஜாரா, சிஎஸ்கே ஜெர்ஸியில் ஆடுவதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில், சென்னையில் சோழா ஓட்டலில், பிப்ரவரி 18ம் தேதி நடந்த ஏலத்தில், இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் சத்தீஷ்வர் புஜாரா, ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரை அதே விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக ஐபிஎல் போட்டியில் புஜாரா விளையாடியிருந்தார். அதன்பின் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, மஞ்சள் ஆடையை அணிய உள்ளார். இந்த நிலையில் புஜாரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியது சிறப்பானதாக உள்ளது. சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட எதிர்பார்ப்புடன் உள்ளேன். நான் தோனி தலைமையில் மீண்டும் விளையாட இருக்கிறேன். நான் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும்போது தோனிதான் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் அவருடன் மீண்டும் இணைந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.