டில்லி

ன்லைன் வர்த்தகம் செய்யும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனலைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன.  இந்த நிறுவனம் அரிசி, மளிகை, மின்னணு சாதனங்கள், மொபைல், டிவிக்கள், என அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.  மக்கள் இந்த ஆன்லைன் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு கடைகளுக்குச் செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

நேற்று டில்லியில் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு பொது செயலர் பிரவீன் கண்டேல்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “அமேசான் நிறுவனம் மற்ற நிறுவனங்களால் போட்டியிட முடியாத அளவுக்குப் பொருட்களின் விலையைக் குறைக்கிறது.  இதனால் சந்தையில் படும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்

மேலும் இந்த நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு விதிகளை மீறுவதாகவும் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது.  எனவே இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு இவ்வாறு கோரிக்கை விடுத்தது குறித்து அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இதுவரை விளக்கம் ஏதும் அளிக்காமல் உள்ளன.