சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில், தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.16.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். இதுதான் தற்போது பலரின் புருவத்தை உயரச் செய்துள்ளது.
இந்தளவு விலைக்கு, அவர் உண்மையிலேயே தகுதியானவர்தானா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
ஏனெனில், யுவராஜ் சிங்குக்கு 16 கோடி கொடுப்பட்டதே, ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகையாகும்.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலை போன வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் மோரிஸ் பெற்றுள்ளார். கடந்த 2020 சீசனில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸை 15.50 கோடிக்கு கொல்கத்தா எடுத்திருந்ததே ஒரு வேகப்பந்து வீச்சாளரின் அதிகபட்ச தொகையாக இருந்தது. அதையும் மோரிஸ் முறியடித்துள்ளார்.
ரைட் ஆர்ம் பாஸ்ட் பவுலரான மோரிஸ் இதுவரை 70 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 551 ரன்கள் எடுத்துள்ளார். ஆவரேஜ் 23.95. ஸ்டிரைக் ரேட் 157.87. பந்துவீச்சில் 80 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், ஓவருக்கு 7.81 ரன்கள் கொடுத்திருக்கிறார்.
காயம்தான் இவரது மைனஸ். அடிக்கடி காயத்தால் சிக்குவதால், நிலையாக இவரால் அணிக்கு பங்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. கடந்த 2020 சீசனில் கூட இவர் ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கிட்டத்தட்ட ஓராண்டு இவர் பெரிதாக எந்த கிரிக்கெட்டும் விளையாடவில்லை. அப்படி இருக்கையில், எந்த நம்பிக்கையில் இவரை நம்பி இத்தனை கோடிகளை ராஜஸ்தான் அணி நிர்வாகம் முதலீடு செய்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
இவரின் பெரிய பலம் என்னவென்று பார்த்தால், இவர் களத்தில் பதற்றமடையாமல் செயல்படுவார் என்பதுதான்!
ஆகமொத்தம், இந்த ஐபிஎல் ஏலம் பல ஆச்சர்யங்களை கிளப்பியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.