ஷில்லாங்: மேகாலயாவில் வாட் வரியை மாநில அரசு கணிசமாக குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 5 முதல் 7 வரை குறைந்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 முதல் 30 காசுகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் 90 ரூபாயை தாண்டி உள்ள பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக மேகாலயா அரசு வாட் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வாட் வரியை அரசு கணிசமாக குறைத்ததால் பெட்ரோல், டீசலின் விலை ரூபாய் 5 முதல் 7 வரை குறைந்துள்ளது. மேகாலயாவை பின்பற்றி மற்ற மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.