புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், இதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில், தமிழக சடடமன்ற தேர்தலோடு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 14 பேர் ஆதரவு இருந்து வந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  10 பேர், கூட்டணி கட்சியான  திமுக 3 ,  சுயேட்சையின் (மாஹே தொகுதி) எம்எல்ஏ என 14 பேர் ஆதரவுடன் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் தனது பதவியை ராஜினாமா செய்ததுவிட்டு,  டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து எம்எல்எ  தீப்பாய்ந்தான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து,  அமைச்சர்  மல்லாடி கிருஷ்ணராவும் தனது அமைச்சர் பதவியை ராஜினா செய்தார். பின்னர், நேற்று தனதுஎம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்,  நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை 2016-ல் விட்டுக்கொடுத்த  ஜான்குமார், பின்னர் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்து வந்த நிலையில், இன்று  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் ராஜினாமா கடிதத்தை ஜான்குமார் வழங்கினார்.

இதுவரை  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர், இதன் மூலம், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.

தற்போதைய நிலையில், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர்  என எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை  14 ஆக உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை, புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில்,  அடுத்தடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.