டெல்லி: அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்; இடஒதுக்கீட்டில் அல்ல என்று அதிரடியாக கூறியுள்ள உச்சநீதிமற்ம், தமிழகத்தில் அரசு பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு பணிகளில் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016-ல் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்ற சட்டப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டது.
இதை ரத்து செய்யக்கோரியும், போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக்கோரியும், நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ராஜா, செந்தில்குமார் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசின் உத்தரவை ரத்து செய்தது. இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு பதவி உயர்வை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், தமிழகஅரசு தரப்பில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. அத்துடன் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு அடிப்படையில் சீனியாரிட்டியை கணக்கீட்டு, 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகஅரசு இதுவரை, தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு தமிழகஅரசு சார்பில், 4 வார கால கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகஅரசின், பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, போட்டி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 4 வாரத்தில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லையெனில் தலைமை செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.