சென்னை: சமீபகாலமாக, தான் பேட்டிங்கில் காட்டிவரும் முன்னேற்றத்திற்கான காரணகர்த்தாவாக, இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை குறிப்பிட விரும்புவதாக கூறியுள்ளார் இந்திய ஆல்ரவுண்டராக பரிணமித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்.

அஸ்வினின் இந்தப் பெருந்தன்மை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், தற்போதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, சதமும் அடித்துள்ளார் அஸ்வின்.

இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “இது கடந்த 3 நாட்களாகத்தான் நடந்து வருகிறது என்று என்னால் கூற முடியாது. நான் விக்ரம் ரத்தோருடன் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். கடந்த 4 அல்லது 5 போட்டிகளாக, எனது பேட்டிங் எப்படி மேம்பாடு கண்டு வந்துள்ளது என்பதற்கான கிரெடிட்டை அவருக்கு வழங்க நான் விரும்புகிறேன்.

அடுத்த டெஸ்ட் சென்னையில் எப்போது நடக்குமென்று எனக்குத் தெரியாது. மேலும், இன்னொரு டெஸ்ட் போட்டியை நான் ச‍ென்னையில் ஆடுவேனா என்றும் தெரியாது. அவர் எனக்கான ஆலோசனைகளை நிறைய வழங்கினார். நான் சதமடித்தபோது, அவர் பெரியளவில் மகிழ்ந்திருப்பார்” என்றுள்ளார் அஸ்வின்.