காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த, குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநில முதல்வர் விஜய் ருபானி ஓட்டுவேட்டையாடி வருகிறார். இது தொடர்பாக நேற்று வதோராவில் உள்ள நிஜாம்புரா பகுதியில் பஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் விஜய் ருபானி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திடீரென அவர் மயங்கினார். அவரை அருகே இருந்த உதவியாளர் தாங்கிக்பிடித்துக்கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே விஜய் ருபானி விமானத்தில் அகமதாபாத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. இதையடுது விஜய் ருபானி நலமாக இருப்பதாகவும், தொடர் பயணங்களின் காரணமாக அவர் சோர்வடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வரும், நான் நலமுடன் இருக்கிறேன். எனவே பொதுமக்களும், தொண்டர்களும் கவலைகொள்ள வேண்டாம். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி” என்று டிவிட் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்ருபானிக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் உள்ளவர்கள், கொரோனா சோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.