டெல்லி: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி கைது செய்துள்ள காவல்துறை, தற்போது மற்றொரு ஆர்வலரான மும்பை வழககறிஞர்  நிகிதா ஜேக்கப் மீது  ஜாமின் பெற முடியாத முறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோடி அரசு அமல்படுத்தி உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில்  70 நாட்களை கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி என்ற மாணவி (வயது 22), சமூக வலைத்தளங்களில் கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது ஒரு போராட்டக்குழு சார்பில்  பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இது சர்ச்சையாக்கப்பட்டது.  இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்திவந்தனர். அதில், சமூக ஆர்வலரான திஷா ரவி பெங்களூருவில்  உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதுடன்,  பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  இவர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,  சமூக வலைத்தளம் வாயிலாக   தகவல்களை அனுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, பெங்களூரு வந்த டெல்லி போலீசார், திஷா ரவிமீது,  தூண்டிவிடுவதாக அவர் மீது குற்றம்சாட்டி கைது செய்தனர்.  மேலும் அவர் ஜாமினில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ள்ளது.  கைது செய்யப்பட்ட திஷா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் வழக்கில்  மற்றொரு ஆர்வலரான, மும்பை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மீது டெல்லி காவல்துறையினர் ஜாமின் பெற முடியாத வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அறிந்துகொண்ட  நிகிதா ஜேக்கப் தலைமறைவாக உள்ளதாகவும், அவருக்கு எதிராக தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்காத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் தலைநகர வட்டாரங்கள் தெரிவித்தன.

நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு  தேடி வருவதாகவும், ஏற்கனவே கடந்த 11ந்தேதி காவல்துறையின் ஒரு குழு,  நிகிதா ஜேக்கப்பின் வீட்டிற்கு சென்று தேடியதாகவும், ஆனால்,  அவர்கள் மாலை நேரத்தில், வீட்டிற்கு வந்ததால், அதிகாரிகளால், பெண்ணான நிகிதா ஜேக்கப்பிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிகிதா ஜேக்கப் தலைமறைவானதாக கூறப்படுகிறது.