சென்னை

வ்வொரு ஆண்டும் உயிரிழப்பு தொடர்வதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக பொதுச் செயலர் துரைமுருகன் கூறி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.   இந்த விபத்தில் 15 அறைகள் இடிந்து தரை மட்டம் ஆகியது.  விபத்தில் சிக்கிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.   மேலும் 30 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அதில் 11 பே உயிர் இழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் தங்களுக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அளிக்கவில்லை எனில் உடல்களை வாங்க மாட்டோம் எனப் போராட்டம் நடத்தினார்கள்.  இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  அதன் பிறகு அரசின் நிவாரணத் தொகை மற்றும் இறுதிச் செலவுக்கான ரொக்கம் வழங்கப்பட்ட பிறகு உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதுவரை 16 பேர் உடல்கள் பெறப்பட்டுள்ளன.  சாத்தூர் மருத்துவமனையில் மூன்று பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளன. இந்த பட்டாசு ஆலையின் குத்தகை தாரர் பொன்னு பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.  இவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இவர்கள் அனைவரின் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலர் துரைமுருகன் இது குறித்து செய்தியாளர்களிடம், “பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது.   எனவே பட்டாசு விற்பனை தடை செய்ய வேண்டும்.  இந்த தடையால் தொழிலாளர்கள் பணி இழக்க நேரிடும் என்பதால் அவர்களுக்கு மாற்றுத் தொழிலை ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.