பெங்களூரு: உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய வாசிம் ஜாபருக்கு, அனில் கும்ளே மற்றும் இர்பான் பதான் போன்ற முன்னாள் இந்திய நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணியிலிருந்து வாசிம் ஜாபர் ராஜினாமா செய்தார். ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் அதிக அளவு ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை அவர் வைத்துள்ளார்.

வீரர்கள் மத்தியில் அவர் மதப்பாகுபாடு காட்டுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது மற்றும் வீரர்கள் தேர்வில் சுதந்திரம் பறிபோனது போன்ற காரணங்களால் அவர் ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாசிம் ஜாபரின் செயல்பாடுகளுக்கு ஆதரவாய், அனில் கும்ளே மற்றும் இர்பான் பதான் போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வாசிம் ஜாபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர்கள், ஜாபர் அப்படியான நபர் இல்லையென்று சான்றளித்துள்ளனர்.

“உங்களுடன் இருக்கிறேன் வாசிம். நீங்கள் சரியானதையே செய்தீர்கள். ஆனால், கெடுவாய்ப்பாக உங்களை, உத்தரகாண்ட் அணியின் வீரர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றுள்ளார் கும்ளே.

“நீங்கள் இதை விளக்க நேர்ந்தது துரதிருஷ்டவசமானது” என்றுள்ளார் இர்பான் பதான்.