பெங்களூருவிலிருந்து சென்னை திரும்புகையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா, “பொது எதிரி திமுகதான், அந்தப் பொது எதிரியை வீழ்த்த கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றுள்ளார்.
தான் அமைத்த அமைச்சரவையின் முதல்வர் உள்ளிட்ட பல சகாக்கள் தனக்கு சொல்லொணா துரோகத்தை இழைத்து வருகையிலும்கூட, அவர்களைப் பற்றி பெரிதாக பேசாமல், திமுகவை இங்கே குறிப்பிடுகிறார் என்றால், அவர் அரசியலில் தெளிவாக இருக்கிறார் என்று அர்த்தம்!
கடந்த 1989ம் ஆண்டு ஜெயலலிதாவை காட்டி, சசிகலா – நடராஜன் இணை முன்வைத்த அதிரடிகளால், அதிமுக பிளவுபட்டு, கட்சியின் கொடி & சின்னம் முடக்கப்பட்டது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவி ஜானகியை தலைவராகக் கொண்டு இயங்கிய அணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி கண்ட சிவாஜி கணேசனையும் கூட்டு சேர்த்துக் கொண்டது.
ஆனால், அந்த அணிக்கும், ஜெயலலிதா தலைமையிலான மற்றொரு அணிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. சசிகலா -நடராஜன் இணையினால் வழிகாட்டப்பட்ட ஜெயலலிதா தலைமையிலான அணி, ஆட்சியைவிட கட்சியைக் கைப்பற்றுவதில் முனைப்புக் காட்டியது. அதாவது, அதிமுகவின் தொண்டர்களை தம் வசப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இயல்பிலேயே கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு கொண்ட அதிமுக தொண்டர்களுக்கு, திமுக தலைவரை யார் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களோ, அவர்களைத்தான் அரசியல்ரீதியாக மிகவும் பிடிக்கும். சசிகலா – நடராஜன் இணையின் ஆலோசனையின்படி, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டார் ஜெயலலிதா.
விளைவு, சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோதும், 27 தொகுதிகள் கிடைத்ததோடு, 22.37% வாக்குகளும் கிடைத்தன. ஆனால், வி.என்.ஜானகி அணியினருக்கு அந்த அடிப்படை விஷயம் புரிபடவில்லை. விளைவு, அந்த அணி வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றதோடு, தோராயமாக 10% வாக்குகளை மட்டுமே பெற்றது. பின்னர், அரசியலைவிட்டே விலகிவிட்டார் ஜானகி. விளைவு, அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா.
திமுகவிலிருந்து வைகோ பிரிந்த பிறகு, 1996ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஆனால், ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசிய அந்த தேர்தலில், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்காமல், கலைஞர் கருணாநிதிக்கும், தனக்கும் ஏற்பட்ட லடாய் குறித்து பேசி, அரசியலில் தோற்றுப்போனார் வைகோ.
இப்போது, திமுக, கட்சி அடிப்படையில் மட்டுமின்றி, கூட்டணி சகிதமும் வலிமையாக உள்ளது. அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சிக்குள் நடந்துவரும் போராட்டங்களைக் கண்டு வெறுத்துப் போயிருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி, என்னதான் திமுகவை அட்டாக் செய்துவந்தாலும், அவரால் உள்கட்சிப் போராட்டங்களை சமாளிக்க முடியவில்லை.
இந்நிலையில்தான், சட்டப்படி, அதிமுகவின் பொதுச்செயலாளர் தான்தான் என்று உரிமைகோரி கோதாவில் குதித்துள்ள சசிகலா, திமுகதான் பொது எதிரி என்று பேசுகிறார். கட்சியின் ஒற்றுமை குறித்தும் வலியுறுத்துகிறார். இது, அக்கட்சியின் தொண்டர்கள் விரும்பக்கூடிய ஒன்று!
கடந்த 1989ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு சொல்லிக் கொடுத்த பாடத்தை, இப்போது இவர்களே பின்பற்றும் நிலை வந்துள்ளது..!
– மதுரை மாயாண்டி