சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் முதல்பந்தில் அவுட் செய்து சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக 100ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
இன்று முற்பகல் இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 4வது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பர்ன்ஸை, தனது சுழற்பந்து மூலம் டக்அவுட் ஆக்கி வெளியேற்றினார். இதனால், அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று முதல் தொடங்கி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 29 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ரஹானேவும் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 73 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதையடுத்து ஜோடி சேர்ந்த புஜாராவும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் அடித்த நிலையில் புஜாரா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் பெஸ்ஸின் சுழலில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். 225 ரன்களுக்கு ஆறு விக்கெட் விழுந்துவிட, அதன்பின்னர் தமிழர்களான வாஷிங்டன் சுந்தரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி 17 ஓவர்களை விக்கெட் விழாமல் கவனமாக ஆடி முடித்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்திருந்தது.
4ம் நாள் ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தரும் அஷ்வினும் தொடர்ந்தனர். மிகக்கவனமாக ஆடிய அஷ்வின், லீச்சின் சுழலில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனதை சரியாக கணிக்காததால் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். 4ம் நாள் ஆட்டத்தில் சற்று வேகமாக அடித்து ஆடி ஸ்கோர் செய்தார் வாஷிங்டன் சுந்தர். அஷ்வின் ஆட்டமிழந்த பின்னர், இந்திய அணியின் டெயிலெண்டர்களான நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அஷ்வின் ஆட்டமிழந்த அடுத்த 27 ரன்னில் இந்திய அணி ஆல் அவுட்டானது.
ஒருமுனையில் சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் களத்தில் இருக்க, மறுமுனையில் நதீம், இஷாந்த், பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 337 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சுருண்டது. வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
4ம் நாளான இன்று, 241 ரன்கள் என்ற முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக,ரோரி பர்ன்ஸ், டிபி ஷிப்லி ஆகியோர் களமிறங்கினர். பந்துவீச்சை தமிழகத்தைச் சேர்ந்த வீரரான அஸ்வின் வீசத்தொடங்கினார். அவரது முதல் சுழல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கி பன்ஸ் வெளியேற்றிய அஸ்வின், 100 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம், ஆர் அஸ்வின் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் ஒரு விக்கெட்டைப் பெற்ற முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக ஆகி உள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை செய்த வீரர், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பெர்ட் வோக்லர். இவர் 1907ம் ஆண்டு இதுபோன்ற சாதனையை செய்திருந்தார். தற்போது அவரது சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
‘புதிய சாதனை படைத்த அஸ்வினுக்கு சக வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.