மிசோரி: உத்திரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவை ஒட்டி, தேசிய மின்சார விநியோக கட்டமைப்பிற்கு மின்சாரம் வழங்கும் 200 மெகாவாட் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மாநிலத்தின், தேரி மற்றும் கொட்டேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்த பிளாண்ட்டுகளை உள்ளூர் நிர்வாகம் மூடியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்திரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள பெரிய பணிப்பாறை உருகியதால், டெளலி கங்கா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்த ஆற்றின் கரையிலிருந்து மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரி மற்றும் கொட்டேஷ்வர் ஆகிய இடங்களிலுள்ள பவர் பிளான்ட்டுகள் மூடப்பட்டுவிட்டன. இதனால், தேசிய மின்சார விநியோக கட்டமைப்பிற்கு சென்றுசேர வேண்டிய சுமார் 200 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநில அரசு நடத்தும் என்டிபிசி எனப்படும் மிகப்பெரிய நீர்மின்சக்தி திட்டத்தில் இடம்பெற்றுள்ள அணைகளில் ஒன்றான தபோவன் விஷ்னுகாட் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பலகோடி ரூபாய்கள் நட்டம் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.