டெல்லி: உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் இன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
நாட்டின் துயர சம்பவமாக இந்த நிகழ்வு கருதப்படும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநில அரசும் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.