டேராடூன்: உத்தரகாண்ட் வெள்ள பெருக்கில் சிக்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட, தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு, வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையமும் சேதமடைந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து இந்தோ திபெத் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே கூறி இருப்பதாவது: தபோவன் மற்றும் உள்ளூர் நிர்வாகம் தந்துள்ள தகவல்கள்படி, 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். அவர்களில் இது வரை 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று  தெரிவித்துள்ளார்.

மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.