டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக சில மாநிலங்களில் விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி எல்லையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. அண்மை காலமாக, சர்வதேச ரீதியாக பல்வேறு பிரபலங்களிடம் இருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன.
இந் நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தூண்டி விடப்படுகின்றனர் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறி உள்ளார். இது குறித்து அவர் மாநிலங்களவையில் பேசியதாவது:
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டது தான் வேளாண் சட்டங்கள். விவசாயிகளின் நலனில் பிரதமர் உறுதி பூண்டுள்ளார் என்பதை, இந்த அவைக்கும், விவசாயிகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரமாக, அவர்கள் செலவிட்டதை விட கூடுதலாக 50 சதவீத தொகை தரப்படுகிறது. தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ், விவசாய உள் கட்டமைப்பு நிதி ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள், ஏழை எளியவர்கள், விவசாயிகளின் நிலையை உயர்த்த இந்த அரசு பாடுபட்டு வருகிறது.
வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு தயார் என்று கூறியதால், உடனடியாக அதில் பிரச்னை இருப்பதாக நினைக்க வேண்டாம். குறிப்பிட்ட சில மாநிலங்களில் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.