‘சென்னை: தலைவர்களுக்காக இன்னும் எத்தனை நினைவுச் சின்னங்களை உருவாக்குவீர்கள்? என வேதா நிலையம் வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீடு, அரசு உடைமையாக்கப்பட்டு, நினைவில்லமாக மாற்றப்பட்டு உள்ளது. இதை கடந்த ஜனவரி மாதம் 28ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்காக திறந்து வைத்தார்.
முன்னதாக, வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 27ந்தேதி இடைக்கால உத்தரவிட்ட நீதிபதி என்.சேஷசாயி ‘‘வேதா நிலையம் நினைவு இல்லத்தின் திறப்பு விழாவை திட்டமிட்டபடி பிரதான நுழைவுவாயில் கதவை மட்டும் திறந்து ஜன.28-ல் நடத்திக் கொள்ளலாம். ஆனால், இல்லத்துக்குள் உள்ள பொருட்களை தீபா, தீபக் முன்னிலையில் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதால், எக்காரணம் கொண்டும் கட்டிடத்தின் கதவை திறக்கக்கூடாது. விழா முடிந்ததும் அதன் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல பொதுமக்களையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது’’ என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுமீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது, தனி நீதிபதி தனது ஊகத்தின் அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், வேதா நிலையம் இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தனர். சாவியை அரசே வைத்துக்கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால், பொதுமக்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு தீபா, தீபக் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ள நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்.3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பல்வேறு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தலைவர்களுக்காக இன்னும் எத்தனை நினைவுச் சின்னங்களை உருவாக்குவீர்கள்? ஒரே ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல் மட்டுமே இருக்க முடியும் என்றவர், ஒவ்வொரு தலைவருக்கும் நினைவுச் சின்னங்களை நீங்கள் தொடர்ந்து உருவாக்க முடியாது.
ஏற்கனவே மெரினாவில் உள்ள அனைத்து இடங்களையும் நீங்கள் ஆக்கிரமித்து விட்டீர்கள் என்று விமர்சித்தவர், அற்புதமான பங்களிப்புகளை வழங்கும் பல நீதிபதிகள் உள்ளனர். நீதிமன்ற இடங்கள் அனைத்தும் அவற்றின் சிலைகளை நிறுவ பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பியவர், ஏற்கனவே இங்கு பலரின் உருவப்படங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு வேறு எந்தவொரு உருவப்படங்களும் வைக்க இடமில்லாத நிலையே ஏற்படும் என எச்சரித்தார்.