நாட்டின் வளர்ச்சியைப் பற்றி வெற்று கூச்சலிடும் நரேந்திர மோடி அரசாங்கம், இந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில், இந்தியாவினுடைய குழந்தைகள் நலன்களுக்காக என்ன செய்துள்ளது என்று பார்த்தால், அதிர்ச்சிகரமான விஷயங்கள்தான் வெளிவருகின்றன.

கொரோனாவின் பிடியில் சிக்கி, நாட்டின் சாமானிய மக்கள் அல்லலுற்ற நிலையில், அவர்களுக்கான சிறப்பு கவனிப்பு இந்த பட்ஜெட்டில் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆனால், நடந்துள்ளதோ வேறு. அந்தக் கொடுமையை இப்போது பார்ப்போம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு, பட்ஜெட்டில். இந்தாண்டு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.24435 கோடிகள். ஆனால், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.30007.1 கோடிகள். அதாவது, 18.6% குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி சேவைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் வெட்டு ஏற்பட்டுள்ளது. பாலின பேதம் நிலவும் இந்திய சமூகத்தில், இந்த பட்ஜெட் பற்றாக்குறை என்பது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎம்எம்விஒய் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.2500 கோடியிலிருந்து ரூ.1300 கோடி என்ற அளவிற்கு குறைந்துள்ளது. அதாவது, குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்தே, ஏறத்தாழ பாதியளவு பெண்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்கள்தொகையில் 42% இருக்கும் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் முறையாக முழுமையாக செலவு செய்யப்படுவதில்லை. குழந்தைகள் பாதுகாப்பிற்கான நிதி 40% குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1500 கோடியிலிருந்து ரூ.900 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.