டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் விவசாயிகள் இனப்படுகொலை என்ற ஹேஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்டது. அதன் விளைவாக பிரபலங்கள் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எனவே இந்த ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு கூறி இருப்பதாவது: கோபம், வெறுப்பு மற்றும் சமூகத்தில் அசாதாரண சூழல் நிலவும் வகையில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. விவசாயிகள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது பேச்சு சுதந்திரம் அல்ல. அது சட்டம் ஒழுங்கு மீறல் என்று தெரிவித்துள்ளது.