டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி மாதல் முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பள்ளி செல்லாத காரணத்தால் பொதுத் தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. இந் நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று விரிவான தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார். அதில் 10ம் வகுப்பு தேர்வு மே 4ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை நடக்கிறது.  12ம் வகுப்பு தேர்வு மே 4ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்புகளுக்கு காலை 10:30 மணி முதல் முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 12ம் வகுப்புகளுக்கு காலை 10:30 முதல் 1:30 வரையும், பின்னர் மதியம் 2:30 முதல் 5:30 வரையும் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு அட்டவணை www.cbse.gov.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றியும், பதற்றமின்றியும் எதிர்கொள்ள வேண்டும் என்றும்,  தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.