புதுடெல்லி: இதுவரை இல்லாத சாதனை அளவாக, கடந்துசென்ற ஜனவரியில் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது; சாதனை அளவாக இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.19 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த டிசம்பர் மாதம் ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்தது. இம்முறை அதையும் தாண்டி ரூ.1,19,847 கோடியாக சாதனை படைத்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியாக இருந்து வந்தது. ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரம் சீராக செல்வதை குறிக்கிறது. மத்திய ஜிஎஸ்டி, ரூ.21,923 கோடியாக உள்ளது.
மாநில ஜிஎஸ்டியின் வருவாய் ரூ.29,014 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் இறுதி முதல் ஜனவரி கடைசி வரையான காலக்கட்டத்தில், 90 லட்சம் பேர் ஜிஎஸ்டி தாக்கல் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.