லண்டன்: ஆசிய – பசிபிக் பிராந்திய நிலவமைப்பில் அமைந்த, 11 வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகள் கூட்டமைப்பில், தானும் இணையப்போவதாக அறிவித்துள்ளது ஐரோப்பிய நாடான பிரிட்டன்.

பிராந்திய பூகோள அரசியலில், இதுவொரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் எனப்படும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து, கடந்தாண்டு ஜனவரி 31ம் தேதி முறைப்படி வெளியேறியது பிரிட்டன். அதைத் தொடர்ந்து, மற்ற நாடுகளுடன், தொழில் மற்றும் வர்த்தக உறவுக்கான முயற்சிகளில் பிரிட்டன் ஈடுபட்டு வருகிறது. இந்திய அரசுடனும் பேச்சு நடத்தி வருகிறது.

இந்நிலையில், 11 நாடுகள் அடங்கிய சிபிஐபிபி எனப்படும், டிரான்ஸ் பசிபிக் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் இணைவதற்கு பிரிட்டன் விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.