ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கில், சீன அரசின் அடக்குமுறை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வெளியேறி, பிரிட்டனில் தஞ்சமடைந்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், நீண்டகாலம் பிரிட்டனின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த ஹாங்காங், கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதன்பிறகான காலங்களில், சீன அரசின் நடவடிக்கைகள் மீது பலவிதமான புகார்கள் எழத் தொடங்கின.

ஜனநாயகத்தின் குரல்கள் நசுக்கப்படுவதாய் தொடர் குற்றச்சாட்டுகள் கிளம்பின. பேச்சு சுதந்திரம், நியாயமான தேர்தல்கள் உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள் அங்கே நசுக்கப்படுவதாலேயே, ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் வசதிவாய்ப்புகளை உதறிவிட்டு, கொரோனா அச்சுறுத்தலையும் மீறி பிரிட்டனுக்கு செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சீன அரசினால் ஹாங்காங்கில் கொண்டுவரப்பட்ட அடக்குமுறை மிகுந்த தேசிய பாதுகாப்புச் சட்டம், இந்த வெளியேறுதலுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.