புனே
வரும் ஜூன் மாதம் மற்றொரு கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடெங்கும் தொடங்கி உள்ளது. இதற்காக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதரப் பணியாளர்கள் என சுமார் 3 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்தியாவில் மேலும் சில கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அந்த தகவலை உறுதியாக்குவது போல் நேற்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிவாக அதிகாரி ஆதார் புனேவாலா ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “நாங்கள் நோவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கிறோம். இந்த மருந்தும் நல்ல செயல் திறனுடன் உள்ளது. இந்த மருந்தைத் தன்னார்வலர்களிடம் பரிசோதிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளோம். ஜூன் மாதம் இது பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.