சென்னை: காலவரையின்றி சிறையில் வாடும் தமிழர்கள் எழுவர் விடுதலை தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் தான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கால எல்லை முடிவுற்ற நிலையில், இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாகத் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. ஒரு வார காலத்துக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று கால எல்லையும் விதித்திருந்தது. அந்த கால எல்லை ஜனவரி 29ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், ஆளுநரின் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் இனியும் கால அவகாசம் கோராமல், தனக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள தனிப்பெரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளார் திருமாவளவன்.