சென்னை: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்துசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக 30.01.2021 முதல் 02.02.2021 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவையாறில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
01.02.2021 முதல் 03.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.