டெல்லி: டெல்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி அவர்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது.
இந் நிலையில், சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக உள்ளூர் மக்கள் நடமாட இடையூறு ஏற்படுவதுடன் அப்பகுதி கடைகளில் விற்பனை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எனவே அங்கிருந்து விவசாயிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் தடுப்பையும் மீறி போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளை விரட்டியடிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் மக்களின் போராட்டத்தால் சிங்கு பகுதியில் பதட்டம் ஏற்பட அவர்களை கலைந்து செல்லுமாறு கூறி போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.