சீர்காழி: சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் ஒருவனை போலீசார் என்கவுன்ட்ரில் சுட்டுக் கொன்றனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த தன்ராஜ். மனைவி, மகன், மருமகளோடு ஒன்றாக வசித்து வரும் இவர் நகை அடகுக்கடை வைத்துள்ளதோடு, நகைகளை மொத்த விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை தாக்கிவிட்டு உள்ளே இருந்து 16 கிலோ தங்க நகைகளையும், தன்ராஜின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவத்தில் தன்ராஜின் மகன், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர்.
அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். கொள்ளையர்களிடம் இருந்து 16 கிலோ நகைகளும், 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.