முக்த்சார், பஞ்சாப்

ஞ்சாப் மாநிலத்தில் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள 77 கவுன்சிலர் இடங்களுக்கு 46 பாஜகவினர் மட்டுமே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு இவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.  நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கடும் வன்முறை வெடித்து டில்லியில் 144 தடை உத்தரவு இடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சார் மாவட்டத்தில் உள்ள மூன்று நகரங்களில் 77 கவுன்சிலர் இடங்களுக்குத் தேர்தல் நடக்க உள்ளது.  இந்த பகுதி பாஜக தலைமை தங்கள் கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துப் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெற்று வருகிறது.  ஆனால் இதுவரை இந்த இடங்களில் போட்டியிட 46 பாஜகவினர் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளனர்.  இதற்கு முக்கிய காரணம் விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக அச்சம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து முக்த்சார் மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்,  “ஒரு சில தொண்டர்கள் விவசாயிகள் போராட்டம் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர். நாங்கள் அவர்கள் கருத்தை மாநில தலைவர் அஸ்வனி சர்மாவிடம் தெரிவித்துள்ளோம்.  இது குறித்து ஏற்கனவே இருமுறை அவரை சந்தித்துள்ளேன். மீண்டும் வரும் 29 ஆம் தேதி அன்று சந்திப்பு நிகழ உள்ளது.   இதுவரை 46 விருப்ப மனுக்கள் வந்தாலும் இனி அது அதிகரிக்கும்” எனக் கூறி உள்ளார்.