சண்டிகர்: அரியானாவில் 56 வயதான சுகாதார பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.

அம்மாநிலத்தின் குருகிரமை சேர்ந்தவர், 56 வயதான லாஜ்வந்தி. நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கடந்த 16ம் தேதி இவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஊசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பின், லாஜ்வந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த லாஜ்வந்தியின் கணவர், கொரோனா தடுப்பூசி போட்டதால் மனைவி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே மரணத்தின் காரணம் தெரியவரும் என்றும், தடுப்பூசி போட்டதால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.