சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக்கணக்காட்சி யான, பாபசி (BAPASI) யின் சென்னை புத்தக்கண்காட்சி இந்த ஆண்டு நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், ‘கொரோனா வழிகாட்டுதல் நெறிகளுடன் புத்தக் கண்காட்சியை நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து புத்தக் கண்காட்சி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் வழிகாட்டுதலின்படி, வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தகக் காட்சிகள் நடைபெறும் என்றும், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உள்பட, 65 வயதுக்கு மேற்பட்டோர், புத்தகக் காட்சிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கில் பார்வையாளர்கள் 3 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும், கண்டிப்பாக முக்ககவசம் அணிந்திருக்க வேண்டும், அறையில் குளிர்சாதன வசதி பயன்படுத்தக்கூடாது , உள்ளே செல்லவும் வெளியேறவும் தனித்தனி வாயில்கள் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகஅரசு புத்தக்கணக்காட்சி நடத்த அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, விரைவில் புத்தகக்காட்சி தொடங்கப்படும் தேதிகள் முடிவு செய்யப்படும் என்று பாபசி அறிவித்துள்ளது. பொதுவாக ஜனவரி மாதம் பொங்கலையொட்டி 15 நாட்கள் புத்தக் கண்காட்சி நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிப்ரவரி மாதத்தில் 44வது சென்னைப் புத்தகக் காட்சி நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.