பெங்களூரு: கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, ஜெ.ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து வந்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தண்டனை காலம் முடிவடைந்ததால், வரும் 27ஆம் தேதி அன்று விடுதலையாவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்க கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் பெங்களூரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு நிமோனியா காய்ச்சலுடன் கொரோனா தொற்றும் உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிசிக்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விக்டோரியா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், சசிகலா உடல்நிலை குறித்து இன்று காலை (23ந்தேதி) அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தொடர்ந்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளது.
அவரது துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 58 என்ற வகையில் இருப்பதாகவும், இரத்த அழுத்தம் 110/58 மிமீ எச்ஜி, என்ற அளவில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.