சென்னை:  மதபோதகர் பால் தினகரன் சென்னை வீட்டில் இன்று  3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது.  இதுவரை  5கிலோ தங்கக்கட்டிகள், 100கோடி வெளிநாட்டில் முதலீடு உள்பட பலஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில், உலகம் முழுவதும் கிளைகளை வைத்து மத பிரச்சாரம் செய்து வருபவர்  பால் தினகரன். அவருக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்திய நிலையில், இன்று சென்னையில் உள்ள பால் தினகரனின் வீட்டில் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

இவர் வரி ஏய்ப்பு, வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வெளிநாடு மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்றும்  கூறப்படுகிறது.  இதுதொடர்பான புகார்களையடுத்து, வருமான வரித்துறையைச் சேர்ந்த சுமார் 200 ஐடி அதிகாரிகள், அவரது வீடு, நிறுவனங்கள் உள்பட பல இடங்களில்  சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சோதனையின்போது, பலஆயிரம் கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்,  5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்  ஆர்.பி.ஐ அனுமதியின்றி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.