டெல்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல், பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயிகள் பிரச்னை, கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான அளவில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுமா என்பது குறித்த தெளிவான திட்டமிடல் மத்திய அரசிடம் இல்லை என்று கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. முதலில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர், அடுத்தக்கட்டமாக என்னமாதிரியான அணுகுமுறை என்பது பற்றிய தெளிவான நிலைப்பாடும் இல்லை என்றும் விவாதிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள பின்ன்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகள், குறிப்பாக எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஏழைகளுக்கு தடுப்பூசி இலவசமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வலியுறுத்தி உள்ளது. தடுப்பூசியானது வெளிச்சந்தையில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் என்றளவில் விற்கப்படலாம் என்பது குறித்தும் கவலை கொண்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே தெளிவான கொள்கைகளை மத்திய அரசானது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி குறித்த முன்னணி சுகாதார நிபுணர்களிடையே உள்ள தயக்கத்தை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
முன்களத்தில் உள்ள சுகாதார பணியாளர்கள் மட்டுமல்லாது, மாநிலங்களில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல மத்திய அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் எந்த தயக்கமும் இன்றி நாட்டு மக்கள் அனைவரும் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தின் வாயிலாக காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.