மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகளின் படி வேகப்பந்துவீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 விநாடிகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணியில் இடம்பிடிக்க முக்கியமான உடல் தகுதி தேர்வுகளில் ஒன்று யோ யோ டெஸ்ட் ஆகும். இதில் சொதப்பினால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போய்விடும். அணிகளை தேர்வு செய்யும்போது இந்த யோ யோ டெஸ்ட் நடத்தப்படும். இது ஓட்டம் உள்ளிட்ட கடின பயிற்சிகளை உள்ளடக்கியது.
இந்திய அணியில் இடம் பெற்று விளையாட யோ யோ தகுதி தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்ச்சி பெற அவர்கள் 16.1 அளவிலான புள்ளிகள் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் பல்வேறு கட்டங்களை உள்ளடக்கிய இந்த டெஸ்டில் தற்போது புதிய நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கிறது.
அதன்படி, 2 கிமீ சோதனைகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய தரத்தின்படி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 வினாடிகள் ஆகும். பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் மற்றும் ஸ்பின்னர்களுக்கு, தரநிலை 8 நிமிடங்கள் 30 வினாடிகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, அனைவருக்கும் குறைந்தபட்ச யோ யோ நிலையானது 17.1 ஆக உள்ளது.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது எங்கள் உடற்தகுதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் தற்போதைய உடற்பயிற்சி மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை பிசிசிஐ உணர்ந்தது.
இப்போது எங்கள் உடற்பயிற்சி நிலையை வேறு நிலைக்கு கொண்டு செல்வது முக்கியம். நேர சோதனை பயிற்சி இன்னும் சிறப்பாக எங்களுக்கு உதவும். வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ தரத்தை புதுப்பித்து கொண்டே இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.