சவால் மிகுந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை, இந்திய அணி வென்று நம்மை வியப்பிலும் கொண்டாட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது என்றால், அதற்கான மிக முக்கிய காரணங்களில் புஜாராவின் ஆட்டமும் ஒன்று.
ஆனால், ரிஷப் பன்ட், அஸ்வின், ஜடேஜா, விஹாரி மற்றும் ஷப்மன் கில், ரஹானே, சிராஜ் ஆகியோரின் ஆட்டம் கொண்டாடப்படும் அளவிற்கு, புஜாரா கவனம் பெறவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்கும், பிரிஸ்பேன் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றுவதற்கும் மிக மிக முக்கிய காரணம் புஜாரா. மற்ற இரண்டு போட்டிகளிலும் இவர் பங்களிப்பை அளித்திருக்கிறார் என்றாலும், இந்தப் போட்டிகள் அதிகம் கவனிக்கப்படுபவை.
சிட்னிப் போட்டியில், அவர் சுவராக இருந்ததால்தான் ரிஷப் பன்ட் அடித்து வெளுத்தார். பின்னர், அவர் கற்றுக்கொடுத்த பாடத்தைப் பின்பற்றியே அஸ்வினும் விஹாரியும் போட்டியை டிரா செய்தனர்.
கடைசி நாளில் பந்துகள் எகிறும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில், தன் உடலில் கொடூரமான காயங்களை வாங்கி, மனமும் உடலும் தளராமல் நிலைத்து நின்று, ஷப்மன் கில்லுக்கும், ரிஷப் பன்ட்டுக்கும் துணை செய்தார்.
பிரிஸ்பேன் நிகழ்வு குறித்து அவரே கூறுவதைப் பாருங்கள்: “பேட் கம்மின்ஸ் பந்தில் நான் அடிக்கடி அடி வாங்கிக்கொண்டே இருந்தேன். ஏனெனில், பிரிஸ்பேன் பிட்சில் கடைசிநாளில் ஒரு வெடிப்பு இருந்தது. அதில் பந்துகள் எகிறும். பந்துகளை அப்படி எகிற வைப்பதில் பேட் கம்மின்ஸ் திறமையானவர்.
எனவே, மேலெழும்பிவரும் பந்துகளை நான் பேட்டை வைத்து தடுக்க முயற்சித்தால், அது என் குளோவில் பட்டு கேட்சாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே, போட்டியின் சூழலை உணர்ந்து, எந்தவகையிலும் விக்கெட்டைப் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து, அடிகளையெல்லாம் என் உடலில் வாங்கினேன்” என்றுள்ளார் சத்தீஷ்வர் புஜாரா.
இவர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கிடைத்த ஒரு வரமாக திகழ்கிறார்!