ஐதராபாத்: நிறவெறி வசைபாடலுக்கு ஆளானதையடுத்து, விரும்பினால் சிட்னி மைதானத்தை விட்டு வெளியேறலாம் என்று நடுவர்கள் விருப்ப அனுமதியை வழங்கியதாகவும், ஆனால், நாங்கள் தொடர்ந்து விளையாடினோம் என்றும், அந்த வசைபாடல் தனது மனஉறுதியை அதிகரித்தது என்றும் கூறியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.
சிட்னி மைதானத்தில், மூன்றாவது டெஸ்ட்டின்போது, இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் நிறவெறி வசைபாடலுக்கு ஆளானார்கள். இதில், அதிகம் பாதிக்கப்பட்டவர் இந்தியாவின் முகமது சிராஜ்.
தற்போது, நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “சிட்னி மைதானத்தில் நிறவெறி வசைபாடல் நிகழ்ந்த பிறகு, விரும்பினால் ஆட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, பாதியிலேயே வெளியேறலாம் என்ற விருப்ப வாய்ப்பை வழங்கினார்கள் நடுவர்கள். ஆனால், எனது கடமை அணித் தலைவரிடம் தெரிவிப்பது.
எனவே, அதை நான் செய்தேன். அவர் மற்றதை பார்த்துக்கொண்டார். சிட்னி சம்பவம் எனது மனஉறுதியை குலைப்பதற்கு பதில், இன்னும் அதிகரிக்கவே செய்தது. ஆட்டத்தை வெல்ல வேண்டுமென்ற உத்வேகத்தை அளித்தது” என்றுள்ளார் சிராஜ்.