சென்னை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி நீட்டிப்பு குறித்து தமிழகஅரசிடம் கவர்னர் ஆலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் கவர்னர் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறார், இதுதொடர்பாக தமிழகஅரசிடமோ, உயர்கல்வித் துறையிடமோ, கவர்னர் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.