புதுச்சேரி: தொடர் போராட்டத்தினாலேயே 17 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி வழங்கியுள்ளார் என மாநில முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளை கடந்தும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் நாராணசாமி, கவர்னர் கிரண்பேடியை திரும்பபெற வலியுறுத்தி கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில், தற்போது கிரண்பேடி, 17 கோப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலம் எந்த வகையிலும் வளர்ச்சி பெறக்கூடாது என கவர்னர் செயல்பட்டு வருவதாகவும், அவரது நடவடிக்கையை கண்டித்தும், மாநில அரசில் தலையிடுவதை தவிர்க்கக்கோரியும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், அவர் தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளாமல் ஆணவப் போக்கோடு செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தும் வகையில், அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினார். ஆனால், அவரை சந்திக்க கிரண்பேடி மறுத்து, சர்வாதிகாரிபோல நடந்து கொண்டார் என்று கூறியவர், அமைச்சரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, கிரண்பேடி, தற்போது, அவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 36 கோப்புகளில் 17 கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.
புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்மை செய்வதாக நினைத்தால், அவர் புதுச்சேரியை விட்டு காலி செய்து கொண்டு கிளம்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.