கூடலூர்:
சினகுடியில் உயிரிழந்த காட்டு யானைக்கு, (எஸ்.ஐ) சிகிச்சையின் போது உணவு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்த வன ஊழியர் கண்ணீர் சிந்தியது காண்போரை கண்கலங்க செய்தது.

மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றபோது பரிதாபமாக இறந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளிமண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காயத்துடன் 40 வயதான ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. மேலும் பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார், தொட்டிலிங் உள்ளிட்ட கிராம பகுதிக்குள் முகாமிட்டு வந்தது. இந்த காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து காட்டு யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு காட்டு யானையை கண்காணித்து வந்தனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசிம், விஜய், கிரி, கிருஷ்ணன் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. அப்போது கோவை வன கால்நடை டாக்டர் சுகுமாரன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்பட மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதைத்தொடர்ந்து காட்டு யானை சற்று நேரத்தில் மயக்கமடைந்தது. இந்த நேரத்தில் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையின் கால்களை கயிறுகளால் கட்டினர். அப்போது திடீரென காட்டு யானை மயங்கி கீழே விழுந்தது. இதைக்கண்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும்போது, காட்டு யானையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றார்.