கத்தார்:
மூன்றரை ஆண்டு பிராந்திய நெருக்கடி இம்மாத துவக்கத்தில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கத்தாரின் போக்குவரத்தை முற்றுகையிட்ட எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான முதல் நேரடி விமானம் நேற்று பறக்கத் துவங்கியது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், ஈரானுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியது மட்டுமல்லாமல், அதன் காரணமாக கத்தாருடனான பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்டனர்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டுகளை கத்தார் பலமுறை மறுத்திருந்தாலும், கத்தாரின் நிலம், கடல் மற்றும் வான் போக்குவரத்தை நான்கு நாடுகளும் நிறுத்தி வைத்தன.
இதைத்தொடர்ந்து இம்மாத துவக்கத்தில் நான்கு நாடுகளும் வளைகுடா உச்சி மாநாட்டில் அறிவிப்பு ஒன்றில் கையெழுத்திட்டு, தங்களுடைய வான்வெளியை கத்தாருக்காக மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தன.
இதைதொடர்ந்து நேற்று முதல் நாளாக கத்தாரிலிருந்து எகிப்திற்கு வணிக விமானம் ஒன்று பறந்தது. மேலும் இந்த முற்றுகையின் காரணமாக கத்தாரில் குடிகொண்டிருந்த 3 லட்சம் எகிப்தியர்கள் தங்களுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தது நேற்றுடன் முடிவடைந்துள்ளது.