கான்பெரா
ஆஸ்திரேலியாவில் முகநூல், கூகுள் போன்ற நிறுவனங்கள் செய்திகளை பிரசுரிக்க அந்நாட்டு அரசு கட்டணம் வசூலிக்க உள்ள சட்டத்தை மாற்ற அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா தொற்று நோயால் உலகெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பல நாடுகளில் ஊடகங்களின் விளம்பர வருவாய் கடுமையாக குறைந்தது. எனவே இந்த வருவாய்க் குறைவை சரிக்கட்ட ஆஸ்திரேலிய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற திட்டமிட்டது. அதன்படி ஊடக செய்திகளை கூகுள், முகநூல் போன்றவை தங்கள் தளத்தில் வெளியிடும் போது அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட ஆலோசனை நடத்தியது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பணம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருவதையும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதால் ஊடகங்களின் வருவாய் முழுவதுமாக குறைந்ததையும் ஆஸ்திரேலிய அரசு சுட்டிக்காட்டியது. மேலும் பல ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் விளம்பர வருமானம் இல்லாததால் செய்தித்தாள்கள் வெளியிடுவதை முழுவதுமாக நிறுத்தி வைத்திருந்ததையும் அரசு எடுத்துரைத்தது.
இதற்கு கூகுள், முகநூல் ஆகிய ஊடகங்கள் மட்டுமின்றி பல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்ற உள்ள இந்த புதிய சட்டத்துக்கு அந்நாட்டு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்ற் உள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் அலுவலக தலைமை அதிகாரி, “ஆஸ்திரேலிய அரசு இந்த புதிய சட்டம் மூலம் செய்திகள் வெளியிட பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட உள்ளது. இதனால் இரு அமெரிக்க நிறுவனங்கள் பெரிதளவில் இழப்பை சந்திக்கும். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்நிறுவனங்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளது.