சென்னை

சென்னையில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர் சாந்தா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

நோபல் பரிசு பெற்ற சி வி ரமன் மற்றும் மற்றும் சந்திரசேகரின் குடும்பத்தில் கடந்த 1927 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று பிறந்த டாக்டர் சாந்தா புற்று நோய் ஆய்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.  தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் வழியில் இவரும் பெண் மருத்துவராக சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம்  பெற்றார்.

டாக்டர் முத்துலட்சுமியின் மகன் கிருஷ்ணமூர்த்தி அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் இணைந்ததைக் கண்ட சாந்தாவும் இங்கு இணைந்தார்.   இந்த மருத்துவமனையை முன்னேற்றுவதில் சாந்தாவின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.  ஒரு சிறு மருத்துவமனையை மாபெறும் புற்று நோய் ஆய்வு நிலையமாக மாற்றியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

தற்போது இவருக்கு 94 வயதாகிறது.  வயது மூப்பு காரணமாக உடல்நிலை சீர் கெட்டதால் இவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.  இன்று அதிகாலை 3.55 மணிக்கு இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் போது உயிர் இழந்தார்.  அவரது உடல் அடையாரு காந்தி நகரில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதே இல்லத்தில் அவர் சுமார் 65 வருடங்களுக்கு மேல் வாழ்ந்துள்ளார்.