சென்னை: தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு நாளை 10, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, மாணாக்கர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா நெறிமுறைகள், பஸ் பாஸ், சீருடை, பாடத்திட்டம் குறைப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிலையங்கள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) டிசம்பர் முதல் கல்லூரிகள், பாலிடெக்னிக் போன்றவைகளில் படித்து வரும் இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக  கல்லூரிகள் திறக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, நாளை (19-ந் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் நாளை முதல் பள்ளிக்கு வருகிறார்கள்.  இதையொட்டி,  கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் அமர வைக்க வேண்டும்.

சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டும் .

பள்ளிக்கு வரும் மாணவர்கள்,  பெற்றோரிடம் இருந்து விருப்ப கடிதம் பெற்றுவர வேண்டும்.

பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது.

பள்ளிக்குள் வரும் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே சுற்ற அனுமதிக்கக்கூடாது.

இறைவணக்க கூடல், விளையாட்டு வகுப்பு போன்றவற்றை நடத்த வேண்டாம்.

பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தியிருக்க  வேண்டும்.

வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட மாணவர்கள் செல்லக்கூடிய பகுதி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

உடல் வெப்ப பரிசோதனைகருவி மூலம் மாணவர்களின் வெப்பத்தை கணக்கீடு செய்ய வேண்டும்.

முன்னதாக  அனைத்து ஆசிரியர்களும் இன்று (18ந்தேதி)  பள்ளிக்கு வர வேண்டும்.

ஆசிரியர்களுக்கு கால அட்டவணை தயாரித்து பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும்.

பாட ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் மாணவர்களை கண்காணித்தல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற பயன்படுத்த வேண்டும்.

மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி அதிகாரிகள் குழுக்களாக சென்று பள்ளிகளில் இன்று ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு, உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையில் 74 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆசிரியர்கள் முழு அளவில் பணியில் இருப்பார்கள். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடைபெறும். பொதுத்தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஆய்வக பரிசோதனைகளும் பாதுகாப்புடன் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்ய போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

பள்ளிசீருடை அணிந்துள்ள மாணாக்கர்கள்,  பழைய பஸ் பயண அட்டையுடன் வரும் மாணவ- மாணவிகளை பஸ்களில் ஏற அனுமதிக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அட்டவணை வெளியாவதை பொருத்து, பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.