சென்னை: தொழில்நுட்ப குறைபாடுகள், சுகாதார ஊழியர்களிடமிருந்து தடுப்பூசி செலுத்துவதற்கான தெளிவான பதில் இல்லாததால், தமிழகத்தில் 292 தடுப்பூசி டோஸ் வீணடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி இயக்கத்தின் முதல்நாளில் 192 தடுப்பூசி டோஸ்கள் வீணடிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஞாயிறன்று 100 டோஸ்கள் வீணாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பயன்படுத்தப்படும் கோவிஷில்டு தடுப்பூசி குப்பிகளில் தலா 0.5 மில்லியில் மொத்தம் 10 குப்பிகள் உள்ளன.
இதேபோன்று கோவாக்சின் தடுப்பூசியில் தலா 0.5 மில்லி அளவில் மொத்தம் 20 டோஸ்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் திறக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும், இல்லையென்றால் வீணாகி விடும். அதற்கு சில உதாரண சம்பவங்களும் கொரோனா தடுப்பசி இயக்கத்தின் போது நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிஷீல்டின் 2 டோஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 8 டோஸ்கள் வீணாகிவிட்டன. அதேபோன்று கள்ளக்குறிச்சியில் 9 டோஸ்கள் பயன்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக வீணானதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நோய் தடுப்பு இணை இயக்குநர் டாக்டர் வினய் குமார் கூறி உள்ளதாவது: கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவு டோஸ்கள் வீணாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு குப்பியை திறந்து ஒரு டோஸ் மருந்து பயன்படுத்திய பிறகு, எஞ்சிய அளவுகள் 4 மணி நேரம் வரை குளிரூட்டப்படுகின்றன.
4 மணி நேரங்களுக்கு பிறகு, பயன்படுத்தப்படாத அளவுகள் ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் மீண்டும் பயன்படுத்த முடியாத இந்த குப்பிகளில் உள்ள மாதிரிகள் சோதனைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.