டில்லி
வீட்டில் உணவு வழங்கும் பணிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி சதவிகிதத்தை 18%லிருந்து 5% ஆகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உணவு விடுதிகளுக்குச் சென்று உணவு அருந்துவதை விட வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வரவழைத்து உணவு அருந்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தின் போது எந்த ஒரு உணவு விடுதியிலும் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்காத நிலையில் வீட்டில் உணவு வழங்கும் சேவை மிகவும் அதிகரித்தது.
உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் வீட்டில் உணவு வழங்குவதற்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது வீட்டில் இருந்து உணவை ஆர்டர் செய்வோர் 13% அதிகப் பணம் அளிக்க வேண்டியுள்ளது. இதையொட்டி வீட்டில் உணவு வழங்கும் பணிக்கும் 5% ஜிஎஸ்டி வசூலிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.,
இது குறித்து பிரபல உணவு விடுதியான ஃபூஸா ஃபுட்ஸ் உரிமையாளர் திபேந்து பானர்ஜி, “இணையம் மூலம் உணவு ஆர்டர் செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது., தற்போது சுமார் 22% அதிகரித்து அமெரிக்க டாலர் மதிப்பில் இது 29.40 கோடி ஆகி உள்ளது. ஆனால் இந்த விலை உயர்வுக்கு ஜிஎஸ்டி 18% வசூலிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். அதே உணவை உணவு விடுதிகளில் வந்து வாங்குவோர் 5% ஜிஎஸ்டி மட்டுமே செலுத்துகின்றனர்,
இந்த வித்தியாசத்தினால் வீட்டில் உணவு வழங்குவது வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கிய போது இந்த பணியின் தேவை அதிகரித்தது. தற்போது கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் உணவு விடுதிகளுக்கு வந்து உணவு உட்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. எனவே வீட்டில் உணவு வழங்கும் பணிக்கும் 5% ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]