பீகார் தலைநகர் பாட்னாவில், தனியார் விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவரது இல்லம், முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து போலீசாருக்கு துப்பு எதுவும் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கட்சி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், நிதீஷ்குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
“ரூபேஷ் குமார் கொலையில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக மாநிலம் முழுக்க செய்திகள் பரவி உள்ளன” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த தேஜஸ்வி, இதன் பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து இது :
“நிதீஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பீகாரில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. இப்போது பீகார், மாநிலம் இந்தியாவிலேயே நம்பர் ஒன். குற்ற தலைநகரமாகி விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் குற்ற சம்பவங்கள் குறைய வேண்டும் இல்லையென்றால், பீகார் மாநில மகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் டெல்லி சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து புகார் அளிப்போம்” என தேஜஸ்வி எச்சரித்தார்.
– பா. பாரதி