காசரகோட்
காசரகோட் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் அடைய ஆசைப்படுபவை குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் வலைத்தளங்களில் வைரலாகிறது.
கேரள மாநிலம் காசரகோட் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் முகமது அசாருதீன் தற்போது மிகவும் புகழ் பெறற் தொடக்க வீரராக உள்ளார். இவர் கடந்த வாரம் மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் 37 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அசாருதீனுக்கு ஆதரவையும் பெருமளவில் அளித்துள்ளது.
ஏற்கனவே ரிஷப் பந்த் 32 பந்துகளில் 100 ரன்ளும் ரோகித் சர்மா 35 பந்துகளில் 100 ரன்களும் அடித்துள்ளனர்.
இதே பெயரைக் கொண்ட முகமது அசாருதீன் தலைமையில் முன்பு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அத்துடன் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் 2009 முதல் 2014 வரை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் இதுவரை 99 டெஸ்ட் பந்தயங்களிலும் 334 ஒரு நாள் பந்தயங்களிலும் விளையாடி உள்ளார்.
கேரள மாநில முகம்து அசாருதீனை ரசிகர்கள் செல்லமாக ’அடுத்த அசாருதீன்’ என அழைக்கின்றனர். இவரைச் சமீபத்தில் ஒரு செய்தி ஊடகம் பேட்டி கண்டுள்ளது. அப்போது அவர் தமது வாழ்நாளில் அடைய வேண்டியவை என ஒரு பட்டியலையே கொடுத்துள்ளார்.
அந்த பட்டியலில் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பங்கு பெறுவது, தொடர்ந்து ஐபிஎல் அணியில் இடம் பெறுவது மும்பையில் தாம் படைத்த சாதனையான 37 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததை தாமே முறியடிப்பது, ஒரு சொந்த வீடு, ஒரு பென்ஸ் கார், ரஞ்சி கோப்பையில் 400 ரன்கள் அடிப்பது எனக் குறிப்பிட்டுள்ளார்