தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி கடந்த 14ந்தேதி அன்று தொடங்கியது. முதல்நாள் (14ந்தேதி) அவனியபுரத்திலும், நேற்று (15ந்தேதி) பாலமேட்டிலும்நடைபெற்றது. பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று (16ந்தேதி), உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் முனியாண்டி கோயில் காளைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மதுரை ஆட்சியர் அன்பழகன் உறுதி மொழி வாசிக்க முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 655 காளைகள் பங்கேற்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் களமிறங்கின. அதை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் , அதிமுக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மருத்துவ பணியில் தயாராக உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு பலத்த 3000க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடிவீரர், காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. பைக், தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளும் தரப்படுகின்றன.